ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
அதிராம்பட்டினம்
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மாணவர்கள்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நரசிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிகொல்லை காடு கிராமத்தை சேர்ந்தவர் திருமாறன். இவருடைய மகன் வைரமுத்து (வயது19). இவர் அதிராம்பட்டினத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி முதல் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த மணிமாறன் மகன் நித்திஷ் என்ற வைரக்குமார்(16). இவர் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
ஆற்றில் மூழ்கினர்
நேற்று மதியம் இவர்கள் இருவரும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து ஆவணி ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஒரு கோவிலில் சாமி கும்பிடுவதற்காக கருங்குளம் நசுவனி ஆற்றுக்கு சென்று குளித்தனர். அப்போது நித்திஷ் ஆற்றில் மூழ்கினார். உடனே அவரை காப்பாற்ற வைரமுத்து முயன்றார். அப்போது அவரும் ஆற்றில் மூழ்கினார்.
இதைக்கண்ட இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர்.
இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து ஆற்றில் இறங்கி அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இறந்த நிலையில் வைரமுத்துவை மீட்டனர். நித்திசை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இ்தையடுத்து அவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
6 மணிநேரத்துக்கு பிறகு உடல் மீட்பு
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் இறங்கி நித்திசை தேடினர். அப்போது ஆற்று அருகே தடுப்பணையில் மதகு திறந்திருந்ததால் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் தேடும் பணி தாமதமானது. இதுகுறித்து பொதுப்பணித்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து திறந்து இருந்து மதகை மூடினர். இதனால் நீர்வரத்து குறைவானது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். 6 மணிநேரத்திற்கு பிறகு நித்திசை பிணமாக மீட்டனர்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆற்றில் மூழ்கி இறந்த 2 மாணவர்களின் உடல்களை கைப்பற்றி அதிராம்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.