குளிக்க சென்று கண்மாயில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு
ககண்மாயில் குளிக்க சென்றிருந்த 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கண்மாயில் குளிக்க சென்றிருந்த 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பள்ளிகள் விடுமுறை
மதுரை சிலைமான் போலீஸ் எல்லைக்கு உட்பட்டது சக்கிமங்கலம். இங்கு சவுராஷ்டிரா காலனியைச் சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மகன் ஆதிசேஷன் (வயது 14). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.
இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர் கண்ணன். இவருடைய மகன் ஹேமன் (8). இவன், அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சிறுவர்கள் ஆதிசேஷன், ஹேமன் ஆகியோர் நேற்று சக்கிமங்கலம் கண்மாய்க்கு குளிக்க சென்றுள்ளனர்.
நீண்ட நேரம் ஆகியும், இவர்கள் இருவரும் வீட்டிற்கு வராமல் இருந்தனர். இதனால், சந்தேகம் அடைந்த பெற்றோர் தேடி உள்ளனர்.
பிணமாக மீட்பு
அங்குள்ள கண்மாய்கரையில் பார்த்தபோது, சிறுவர்களின் உடைகள் மற்றும் காலணிகள் கிடைந்தன. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தீயணைப்புத்துறையினர் மற்றும் சிலைமான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி அந்த கண்மாயில் இருந்து சிறுவர்களின் உடல்களை மீட்டனர்.
குளித்த போது, அவர்கள் கண்மாயின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என தெரியவந்தது. சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சோக சம்பவம் தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
------------------