மாணவிகளை தாக்கிய 2 ஆசிரியைகள் பணியிட மாற்றம்


மாணவிகளை தாக்கிய 2 ஆசிரியைகள் பணியிட மாற்றம்
x

ஏலகிரி மலை அரசு பள்ளியில் மாணவிகளை தாக்கிய 2 ஆசிரியைகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 135 மலைவாழ் மக்களின் குழந்தைகள் பயின்று வருகின்றனர். எபினேசர் மற்றும் ஜீவா என்ற 2 ஆசிரியைகள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆங்கில தேர்வு நடத்தி உள்ளனர். இதில் மாணவ- மாணவிகள் சரியாக தேர்வு எழுதவில்லை என்று ஆசிரியைகள், சுமார் பத்து மாணவ- மாணவிகளை மூங்கில் கம்பால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது.

மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற குழந்தைகள் இதுகுறித்து தங்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து உடனடியாக மாணவ- மாணவிகளை ஏலகிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொடர்ந்து ஏலகிரி மலை போலீஸ் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, வட்டார கல்வி அலுவலர்கள் ரமணன், வேணுகோபால், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

நேற்று காலை பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் தலைமை ஆசிரியை எபினேசர், ஆசிரியை ஜீவா ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

மாணவிகளை அடித்த ஆசிரியை ஜீவா அவர் ஒரு வருடத்திற்கு முன்பு பணியாற்றிய உதவி பெறும் பள்ளிக்கே மீண்டும் மாற்றப்பட்டுள்ளார். ஆசிரியைகள் மாற்றப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் ஏலகிரி மலையில் உள்ள பள்ளிகளில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு சிறப்பாக நல்ல முறையில் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும் என்றனர்.


Next Story