வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை,
வெவ்வேறு சம்பவங்களில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
அருப்புக்கோட்டை அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் லதா (வயது 26). இவருக்கும் கெப்புலிங்கம் பட்டியை சேர்ந்த ரமேஷ் (30) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் ஆனது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக லதா, தனது கணவரை பிரிந்து கோபாலபுரத்தில் உள்ள தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த லதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்து ஒரு வருடங்களே ஆகி உள்ளதால் ஆர்.டி.ஓ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
அதேபோல ராஜபாளையம் மாலையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜாலிங்கம். இவருடைய மகள் தர்மதேவி (26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சீதாராமன் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
சீதாராமன் சென்னையில் புகையிலை கட்டுப்பாட்டு பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். ஆகையால் தர்மதேவி சென்னையில் கணவருடன் வசித்து வந்தார் இந்நிலையில் சீதாராமனுக்கு போதைப்பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தர்மதேவி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.