திருச்சி ரவுடி கொலை வழக்கில் கைதான 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு
திருச்சி ரவுடி கொலை வழக்கில் கைதான 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஒருவரை திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
திருச்சியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 31). பிரபல ரவுடியான இவர் புதுக்கோட்டையில் கடந்த 12-ந் தேதி பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த கொலையில் தொடர்புடைய திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் (24), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சங்கர் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் புதுக்கோட்டை சிறையில் நேற்று முன்தினம் இரவு அடைத்தனர்.
9 பேர் தொடர்பு
இதற்கிடையில் இந்த கொலை வழக்கில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த இம்ரான் (21) என்பவர் சிக்கினார். அவருக்கு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இம்ரானை கைது செய்தனர். ரவுடி இளவரசனை கொலை செய்த கும்பலில் மீதமுள்ளவர்களை பிடிக்க தனிப்படையினர் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ''ரவுடி இளவரசன் கொலை வழக்கில் மொத்தம் 9 பேர் தொடர்பில் இருந்துள்ளனர். இதில் முக்கியமானவர் திருச்சியை சேர்ந்த ரவுடி ஒருவர் ஆவார். அவர் சொல்லி தான் இளவரசனை கொலை செய்ததாக கைதான 2 பேர் தெரிவித்தனர்.
மேலும் சிறையில் ஏற்பட்ட 2 ரவுடிகளுக்கு இடையேயான மோதலில் பழி தீர்க்க அந்த ரவுடியை ஒரு கும்பல் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளது. இதில் அந்த ரவுடி தரப்பினர் முந்தி, இளவரசனை வெட்டி படுகொலை செய்திருக்கின்றனர். இதில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றனர்.