பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி; ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டுகோள்
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் முன்பதிவு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதால் பக்தர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள அனுமதிப்பது என்றும், தீபாராதனைக்கு பின் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கோவில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-
வருகிற 27-ந்தேதி நடைபெறும் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்துகொள்ள ஆன்லைன் மூலம் கட்டணமில்லா முன்பதிவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களில் குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பேர் மட்டுமே கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.
கட்டணமில்லா சீட்டு
எனவே கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள www.palanimurugan.hrce.gov.in மற்றும் www.hrce.tn.gov.in ஆகிய இணையதளத்தில் வருகிற 18-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் முன்பதிவு செய்யலாம். இதற்கு ஆதார் அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி புத்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று மற்றும் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை அளித்து முன்பதிவு செய்யலாம். 21-ந்தேதி குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் பக்தர்களுக்கு 22-ந் தேதி உறுதி செய்யப்பட்டதற்கான தகவல் மின்னஞ்சல் வழியாகவும், செல்போன் குறுந்தகவல் மூலமும் அனுப்பி வைக்கப்படும்.
இந்த தகவல் கிடைக்கப்பெற்றவர்கள் வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் பழனி ஆர்.எப்.ரோட்டில் உள்ள வேலவன் விடுதியில் பதிவேற்றம் செய்ய சான்றிதழ் நகலுடன் வந்து கட்டணமில்லா சீட்டை பெற்று கொள்ளலாம். மேற்கண்ட 2 நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கட்டணமில்லா சீட்டு பெற முடியும். குறிப்பிட்ட நேரத்திற்கு பின்பு வருவோருக்கு சீட்டு வழங்க இயலாது. இந்த சீட்டை கொண்டு படிப்பாதை வழியே மட்டுமே மலைக்கோவிலுக்கு செல்லலாம். ரோப்கார், மின்இழுவை ரெயில் போன்ற சேவைகளுக்கு இது பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.