2¼ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த சரக்கு ஆட்டோ பறிமுதல்


2¼ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்த சரக்கு ஆட்டோ பறிமுதல்
x
தினத்தந்தி 15 Jun 2023 1:10 AM IST (Updated: 15 Jun 2023 5:19 PM IST)
t-max-icont-min-icon

சரக்கு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 2¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கோழி மற்றும் மீன்பண்ணைக்கு விற்பதற்காக சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 2¼டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். அரிசி, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன்அரிசி கடத்தல்

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.இதையடுத்து திருச்சி மண்டல உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரில் தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் முக்கூட்டு சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த ஆட்டோவில் ரேஷன்அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த ஆட்டோவில் 50 கிலோ எடை கொண்ட 47 மூட்டைகளில் 2 ஆயிரத்து 350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது.

அரிசி, வாகனம் பறிமுதல்

இது தொடர்பாக வாகனத்தை ஓட்டி வந்த உரிமையாளரான புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள ஜெகதாப்பட்டினம் செல்லனேந்தல் பகுதியை சேர்ந்த வேலுசாமி மகன் திருமூர்த்தி (வயது 24) என்பவரை கைது செய்தனர். மேலும் சரக்கு ஆட்டோவையும், அதில் இருந்த ரேஷன்அரிசியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசார் திருமூர்த்தியிடம் விசாரணை நடத்தியதில், அவர் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் மீமிசல் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி பட்டுக்கோட்டை மற்றும் அருகில் உள்ள பகுதியில் உள்ள கோழி மற்றும் மீன் பண்ணைக்கு தீவனத்துக்கு விற்பதற்காக எடுத்து வந்தது தெரிய வந்தது.


Next Story