திண்டுக்கல்லில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


திண்டுக்கல்லில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 April 2023 2:30 AM IST (Updated: 29 April 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தடையை மீறி ஒரு கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி பறிமுதல் செய்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தடையை மீறி ஒரு கடையில் விற்பனைக்கு வைத்திருந்த 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி பறிமுதல் செய்தார்.

அதிரடி சோதனை

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஆனாலும் ஒருசில கடைகள், உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு பாலித்தீன் பைகளில் தான் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதற்கு வசதியாக வெளிமாவட்டங்களில் தயாராகும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் திண்டுக்கல்லுக்கு கடத்தி வரப்படுகின்றன.

எனினும் மாநகராட்சி அதிகாரிகள் ரகசியமாக கண்காணித்து அவ்வப்போது அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திண்டுக்கல் பெரியகடைவீதியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) செபாஸ்டியன், சுகாதார ஆய்வாளர்கள் முருகையா, சுரேஷ்குமார், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், தங்கவேலு உள்ளிட்டோர் அதிரடியாக அந்த கடையில் சோதனை நடத்தினர்.

2 டன் பொருட்கள்

அப்போது அந்த கடையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் காகிதம் உள்ளிட்ட பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த கடையில் இருந்த 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்காரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, மீண்டும் தவறு செய்தால் கடைக்கு 'சீல்' வைக்கப்படும் என்று எச்சரித்தனர்.

இதற்கிடையே மற்றொரு கடையில் இருந்த 40 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் திண்டுக்கல்லுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க, அதை தயாரித்து அனுப்பும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story