2¼ டன் ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல்


2¼ டன் ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல்
x

விருதுநகரில் 2¼ டன் ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்

விருதுநகரில் 2¼ டன் ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதுக்கல்

விருதுநகர் கட்டையாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அப்பகுதியில் சென்று சோதனை நடத்தினர். அங்குள்ள பாலத்துக்கு கீழ் உள்ள கிட்டங்கியில் தலா 40 கிலோ எடை கொண்ட 47 ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. 1880 கிலோ ரேஷன் அரிசி இருந்த 47 ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் இதுதொடர்பாக விருதுநகர் பாத்திமா நகர சேர்ந்த சேவியர் (வயது 58) என்பவரை கைது செய்தனர்

கடத்தல்

இதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள மேம்பாலத்தில் வாகன சோதனை மேற்கொண்டபோது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனங்களை சோதனையிட்டனர். அப்போது திருத்தங்கல்லைச் சேர்ந்த வீரஜோதி(22) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் 120 கிலோ ரேஷன் அரிசி மூடையுடன் வந்து கொண்டிருந்தார். அதேபோன்று கட்டையாபுரத்தை ச்சேர்ந்த பால்பாண்டி(30) என்பவர் 110 கிலோ ரேஷன் அரிசி மூடையுடனும், விருதுநகர் எல்.ஐ.ஜி. காலனியை சேர்ந்த கார்த்திக் ராஜா(26) என்பவர் 105 கிலோ ரேஷன் அரிசி மூடையுடனும் இருசக்கர வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர்.

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இருசக்கர வாகனங்களுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்ததுடன் 3 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மொத்தம் 2 டன் 215 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 4 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story