அரசு பஸ் மீது 2 வேன்கள் மோதல்; அ.தி.மு.க.வினர் உள்பட 22 பேர் காயம்


அரசு பஸ் மீது 2 வேன்கள் மோதல்; அ.தி.மு.க.வினர் உள்பட 22 பேர் காயம்
x

மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு சென்று விட்டு திரும்பியபோது சிறுவாச்சூர் அருகே அரசு பஸ் மீது 2 வேன்கள் மோதின. இதில் அ.தி.மு.க.வினர் உள்பட 22 பேர் காயம் அடைந்தனர்.

அரியலூர்

திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு சென்னை நோக்கி ஒரு அரசு பஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரையில் நடைபெற்றஅ.தி.மு.க. மாநாட்டில் கலந்து கொண்ட கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கட்சியினர், மாநாடு முடிந்து 2 வேன்களில் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

2 வேன்களும் ஒன்றன் பின் ஒன்றாக முன்னால் சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் 2 வேன்களில் பயணம் செய்த அ.தி.மு.க.வை சேர்ந்த 20 பேர் காயமடைந்தனர். மேலும், ஒரு வேனின் உரிமையாளர் கடலூர் மாவட்டம், மேல்பாட்டம்பாக்கத்தை சேர்ந்த கந்தசாமியின் மகன் பவித்ரன் (வயது 26), அந்த வேனின் டிரைவர் அதே பகுதியை சேர்ந்த சிவாவின் மகன் கிருபாகரன் (23) ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதற்கிடையே அங்கு நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும் வந்தனர். பின்னர் அவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

மேலும், விபத்துக்குள்ளான அரசு பஸ், 2 வேன்களை போலீசார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். பின்னர் காயமடைந்த அ.தி.மு.க.வினர் 20 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயமடைந்த பவித்ரன், கிருபாகரன் ஆகியோர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story