கழிவுகளை அகற்றிய 2 வாகனங்கள் பறிமுதல்
மாநகராட்சி அனுமதி பெறாமல் கழிவுகளை அகற்றிய 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன
சிவகாசி
சிவகாசி மாநகராட்சியில் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சங்கரன் அறிவித்து இருந்தார். இது தொடர்பாக 3 கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உரிய அனுமதி பெறாமல் கழிவுகள் அகற்றப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்களிடம் இருந்து மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து கமிஷனர் சங்கரன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் சித்திக், பாண்டியராஜன் ஆகியோர் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு செய்தனர். இதில் திருத்தங்கல் பகுதியில் 2 வாகனங்கள் உரிய அனுமதி பெறாமல் கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் அந்த வாகங்களை பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, சிவகாசி மாநகராட்சி பகுதியில் 11 வாகனங்கள் மட்டுமே உரிய அனுமதி பெற்று கழிவுகளை அகற்றி வருகிறது. மற்றவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்றுவிட்டு கழிவுகளை அகற்றலாம் என்றார்.