கூடலூரில் 2 காட்டுப்பன்றிகள் பலி


கூடலூரில் 2 காட்டுப்பன்றிகள் பலி
x
தினத்தந்தி 19 Jan 2023 12:15 AM IST (Updated: 19 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் 2 காட்டுப்பன்றிகள் பலியானது.

நீலகிரி

கூடலூர்,

கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக ஏராளமான காட்டுப்பன்றிகள் உயிரிழந்தன. தொடர்ந்து அதன் அருகே உள்ள நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிகள் தொடர்ந்து பலியாகி வருகின்றன. அதன் உடல்களை கைப்பற்றி கால்நடை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும் இறந்த 28 காட்டு பன்றிகளின் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதன் முடிவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தாக்கி காட்டுப்பன்றிகள் இறந்தது உறுதியானது. இதையடுத்து வனத்துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர் வளர்ப்பு பன்றி பண்ணைகளில் ஆய்வு நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் தமிழ்நாடு மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து காட்டுப்பன்றிகள் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இதேபோல் கூடலூர் கெவிப்பாரா பகுதியில் 2 காட்டுப்பன்றிகள் உயிரிழந்தன. அதன் பின்னர் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இந்தநிலையில் நடு கூடலூர், ஆனைசெத்தகொல்லி பகுதியில் 2 ஆண் காட்டுப்பன்றிகள் மர்மமாக இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வனச்சரகர் (பொறுப்பு) யுவராஜ் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு உடல்களை கைப்பற்றினர். பின்னர் கால்நடை பராமரிப்பு துறையினர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவு வந்த பின்னரே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தாக்கி உயிரிழந்ததா என்பது தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story