கூட்டநெரிசலை பயன்படுத்தி ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பர்சை திருடிய 2 பெண்கள் கைது
ஓடும் டவுன்பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் பணம் வைத்திருந்த மணிபர்சை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ஓடும் டவுன்பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்ணிடம் பணம் வைத்திருந்த மணிபர்சை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
ரூ.30 ஆயிரம் திருட்டு
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி பேரணிபட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 36). சம்பவத்தன்று இவர் பஸ்சில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து டவுன்பஸ்சில் கீழவாசல் செல்வதற்காக டவுன் பஸ்சில் ஏறினார்.
பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நின்று கொண்டே பயணம் செய்தார். பின்னர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பையை திறந்து பார்த்தபோது மணிபர்சை காணவில்லை. அதில் 30 ஆயிரத்து 700 ரூபாய் இருந்தது. அதனை பஸ்சில் உடன் வந்த மர்மநபர்கள்தான் திருடியது தெரியவந்தது. உடனே ராஜேஸ்வரி விளக்குத்தூண் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.
2 பெண்கள் கைது
அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பஸ்சில் வந்த 2 பெண்கள் தான் அவரிடம் திருடியது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அந்த 2 பெண்களை பிடித்து விசாரித்தனர். அதில் மதுரை சிக்கந்தர் சாவடி மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தேவி (35), தஞ்சாவூர் மாவட்டம் முன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வி என்ற இசக்கி தேவி (38) என்பது தெரியவந்தது.
இவர்கள் கூட்டமாக இருக்கும் பஸ்களில் சென்று அங்கு பெண்களிடம் பர்சு, பணம், நகை போன்றவற்றை திருடுவது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இசக்கிதேவி மீது ஏற்கனவே பணம் திருடிய வழக்கு உள்ளது.