சாலையை சீரமைக்க நிதி ஒதுக்காததை கண்டித்து 2 பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயற்சி


சாலையை சீரமைக்க நிதி ஒதுக்காததை கண்டித்து 2 பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயற்சி
x

சாலையை சீரமைக்க நிதி ஒதுக்காததை கண்டித்து 2 பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயன்றதால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

பத்மநாபபுரம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நேற்று தலைவர் அருள் சோபன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் குறித்து விவாதம் தொடங்கியபோது சுயேச்சை கவுன்சிலர்கள் ஷபீனா, மும்தாஜ் ஆகியோர் தங்கள் இருக்கையைவிட்டு எழுந்து, எங்களது வார்டுகளுக்கு சாலையை சீரமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கவில்லை. வேண்டுமென்றே எங்களை புறக்கணித்திருக்கிறார்கள் என்று கூறியபடி தலைவர் இருக்கைக்கு முன்னால் வந்து ஆவேசமாக பேசினார்கள்.

அப்போது கவுன்சிலர் மும்தாஜ் விவாதிக்கும் பொருள் நகலை கிழித்து போட்டார்.

தீக்குளிக்க முயற்சி

மேலும் கவுன்சிலர்கள் ஷபீனா மற்றும் மும்தாஜ் ஆகியோர் தாங்கள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து மண்எண்ணெயை திடீரென தலையில் ஊற்றி விட்டு தீக்குளிக்க முயன்றனர்.

இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு உண்டானது. இதை பார்த்த துணைத்தலைவர் உண்ணிகிருஷ்ணன், கவுன்சிலர்கள் சிலர் அவர்களிடமிருந்த மண்எண்ணெய் கேனை பறித்தனர். அதைத்தொடர்ந்து கூட்டத்தை ரத்து செய்யும்படி துணைத்தலைவர் வலியுறுத்தினார்.

போலீஸ் பாதுகாப்பு

கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் குறித்து அறிந்ததும் தக்கலை போலீசார் கூட்ட அரங்கில் வந்து பாதுகாப்பில் ஈடுபட்டனர்,

பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் 2 பெண் கவுன்சிலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story