ராணுவ வீரரின் மனைவி தற்கொலை வழக்கில் 2 பெண்களுக்கு அபராதம்; நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
ராணுவ வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 2 பெண்களுக்கு அபராதம் விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நெல்லை:
ராணுவ வீரரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 2 பெண்களுக்கு அபராதம் விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
ராணுவ வீரர் மனைவி
தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள ஜமீன்இலந்தகுளத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி வெண்ணிலா (வயது 21).
வெண்ணிலாவின் தந்தை குருசாமி, தாய் ஜெயக்கொடி ஆகியோர் அதே ஊரைச் சேர்ந்த குருவம்மாள் என்பவரிடம் ரூ.4 ஆயிரம் வட்டிக்கு பணம் வாங்கினார்கள்.
தற்கொலை
குருவம்மாள் இறந்து விட்டதால், அவரது மருமகள் கருப்பாயி, வேல்தாய் ஆகியோர் சம்பவத்தன்று வெண்ணிலா வீட்டிற்கு சென்றனர். அங்கு அவருடைய தாய்-தந்தை வாங்கிய பணத்தை கேட்டு வெண்ணிலாவை அவதூறாக பேசி அடித்து உதைத்து விட்டு சென்றுவிட்டனர். இதனால் மனமுடைந்த வெண்ணிலா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து கருப்பாயி, வேல்தாய் ஆகியோரை கைது செய்து நெல்லை மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அபராதம்
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார் குற்றம் சாட்டப்பட்ட கருப்பாயி, வேல்தாய் ஆகியோருக்கு தலா ரூ.750 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார்.