கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி 2 பெண்கள் படுகாயம்


கொடைக்கானலில் காட்டெருமை தாக்கி 2 பெண்கள் படுகாயம்
x

கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து காட்டெருமைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவது தொடர்கதையாகி விட்டது. இதேபோல் நகர் பகுதிக்குள் வலம் வந்து பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்தநிலையில் கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே உள்ள கீழ்பூமி பகுதியில் இன்று பகலில் வீட்டருகே நின்று கொண்டிருந்த முத்துலெட்சுமி (வயது 51), முத்துமாரி (22) ஆகிய 2 பேரை காட்டெருமை திடீரென தாக்கியது. இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கொடைக்கானலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களை உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல், வனச்சரகர் சிவக்குமார், வனவர் அழகுராஜா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே காட்டெருமை தாக்கியதில் காயம் அடைந்த 2 பெண்களுக்கும் உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்றும், குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story