சேலத்தில் பிரபல நகைக்கடையில் கவரிங் நகையை மாற்றி வைத்து 5½ பவுன் நகை அபேஸ்-கைவரிைச காட்டிய 2 பெண்களுக்கு வலைவீச்சு
சேலத்தில் பிரபல நகைக்கடையில் கவரிங் நகையை மாற்றி வைத்து விட்டு 5½ பவுன் நகையை திருடிச்சென்ற 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கவரிங் நகை
சேலம் டவுன் பகுதியில் பிரபல நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 9-ந் தேதி கடையின் ஊழியர்கள் நகைகளை பரிசோதனை செய்தனர். அப்போது 5½ பவுன் எடை கொண்ட நகையின் மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நகையை தர பரிசோதனை செய்த போது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், இந்த நகை எப்படி அங்கு வந்தது? என்பது குறித்து கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கடந்த 6-ந் தேதி 2 பெண்கள் பர்தா அணிந்து கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஒரு பவுன் நகை எடுத்தனர். அதற்கான தொகையை அவர்கள் செலுத்தினர்.
2 பெண்களுக்கு வலைவீச்சு
இதையடுத்து அவர்கள் கடையில் நகைகளின் சில மாடல்களை பார்த்தனர். அப்போது அவர்கள் தாங்கள் கொண்டு வந்த 5½ பவுன் கவரிங் நகையை அங்கு நைசாக வைத்துவிட்டு ஒரிஜினல் நகையை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.
இதுகுறித்து கடையின் மேலாளர் சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.