கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை,

2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் வழக்குப்பதிவு

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்தனர். கூட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேந்திரன் மனைவி கல்பனா (வயது 24) என்பவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கவனித்த கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

விசாரணையில், கல்பனா தரப்பிற்கும் அவரது எதிர் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து எதிர் தரப்பினர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்து உள்ளனர். ஆனால் போலீசார் பாதிக்கப்பட்ட தங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக கல்பனா தெரிவித்தார். இதையடுத்து அவரையும் கலெக்டர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் அழைத்த வந்த அவரது கணவர் ராஜேந்திரனையும் போலீசார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நிலப்பிரச்சினை

அதேபோல் திருவண்ணாமலை தாலுகா கொளக்கரவாடி அருகில் உள்ள சீலப்பந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி தனலட்சுமி (65) என்பவரும் தான் மறைத்து வைத்து இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணை நடத்தினர். அதில் தனலட்சுமி கூறுகையில், தனக்கு சொந்தமான 60 செண்ட் நிலத்திற்கு எந்தவித சம்பந்தம் இல்லாத அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபர் கூட்டு பட்டாவாக மாற்றி அனுபவித்து வருவதை ரத்து செய்ய கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதனை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து அவரையும் போலீசார் கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story