ரூ.18¾ லட்சம் மோசடி செய்த தம்பதிக்கு 2 ஆண்டு சிறை
ரூ.18¾ லட்சம் மோசடி செய்த தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஏலச்சீட்டு நடத்தி மோசடி
திருச்சி பிச்சாண்டார்கோவிலை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரிடம் கடந்த 2012-ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வந்த தம்பதியான ரமேஷ், ஞானசெல்வி ஆகியோர் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி, பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டனர். இது குறித்து ஜெகதீசன் அளித்த புகாரின்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் 12 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.18 லட்சத்து 83 ஆயிரத்து 500 மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திருச்சி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அப்போது அந்த தம்பதியினர் வழக்கில் முன்ஜாமீன் பெற்றனர். அதன்பிறகு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தனர். இதனால் அவர்களுக்கு கோர்ட்டில் பிடிவாரண்டு பிறக்கப்பிட்டது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மதுரையில் தங்கியிருந்த கணவன், மனைவி இருவரையும் சில மாதங்களுக்கு முன்பு பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
2 ஆண்டு சிறை தண்டனை
பின்னர் இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் ஹேமந்த் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் நீதிபதி மீனாசந்திரா நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியான ரமேஷ், ஞானசெல்விக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.