தொழில் நிறுவனங்களில் குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை-கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை
சேலம் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாவட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்களை தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் கார்மேகம் பேசும் போது கூறியதாவது:-
குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் என்பது 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனைத்து விதமான தொழில்களிலும் வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் ஈடுபடுத்துவதை தடை செய்கிறது.
குழந்தைகள் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் அபாயகரமற்ற தொழில்களில் அவர்களின் கல்வி நேரத்தை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு வழிவகை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
2 ஆண்டு சிறை
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலைகள், அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு தொடக்க கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். எனவே குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அல்லது 2 தண்டனைகளையும் வழங்கப்படும்.
மேலும், மாவட்டம் மற்றும் வட்டார அளவில் பொதுமக்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் குழந்தை தொழிலாளர் குறித்து உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புகார்கள்
குழந்தை தொழிலாளர்கள் தொடர்பான புகார்களை 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணிலோ, அல்லது தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் அலுவலகம், கோரிமேடு, சேலம் என்ற முகவரியிலோ தெரிவிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.