வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஊட்டி,
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஊட்டி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ் (வயது 24). இவர் அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார். பின்னர் அந்த வாலிபர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகராஜை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
2 ஆண்டு சிறை
இந்த வழக்கு ஊட்டியில் உள்ள மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகராஜூக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நாராயணன் தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செந்தில்பிள்ளை ஆஜராகி வாதாடினார்.