வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை
சேலம் செவ்வாய்பேட்டை சென்ன கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ராஜாராம். இவர், 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந் தேதி அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலுக்கு காரில் சென்றார். பின்னர் அவர் காரை நிறுத்திவிட்டு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது, செவ்வாய்பேட்டையை சேர்ந்த ரமேஷ் (37), என்பவர் கோவிலுக்கு வந்து, அங்கு அன்னதானம் வழங்கியவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதனை ராஜாராம் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ், அங்கு நிறுத்தி வைத்திருந்த ராஜாராமின் கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதி ரவி முன்னிலையில் இறுதி விசாரணை நடந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், கார் கண்ணாடியை உடைத்த ரமேசுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் வழங்கி நீதிபதி தீர்ப்பு கூறினார்.