கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறை
பட்டா மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
விருத்தாசலம் அருகே உள்ள புதுவிலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் காத்தவராயன் (வயது 55). இவர் கடந்த 2009-ம் ஆண்டு பட்டா மாற்றம் செய்ய, அப்போது பெரியவடவாடி கிராம நிர்வாக அலுவலராக இருந்த விருத்தகிரியை (67) அணுகினார். அப்போது அவர் பட்டா மாற்றம் செய்து தர வேண்டும் என்றால் தனக்கு லஞ்சமாக ரூ.2 ஆயிரம் தரவேண்டும் என கறாராக கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத காத்தவராயன், இதுபற்றி கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் அளித்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய அறிவுரையின்படி காத்தவராயன் கடந்த 3.7.2009 அன்று கிராம நிர்வாக அலுவலர் விருத்தகிரியிடம் ரசாயன பொடி தடவிய ரூ.2 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விருத்தகிரியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி பிரபாகா் தனது தீர்ப்பில், லஞ்சம் வாங்கிய விருத்தகிரிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.