கோவில்பட்டி கோர்ட்டில் தொழிலாளிக்கு 2 ஆண்டு ஜெயில்
காதல் தம்பதியை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு கோவில்பட்டி கோர்ட்டில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதியை அரிவாளால் வெட்டிய தொழிலாளிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோவில்பட்டி கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
காதல் திருமணம்
கோவில்பட்டி அருகே வில்லிசேரி பத்ரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யனார் மகன் அய்யனார் (வயது 29). தொழிலாளி. இவரது சித்தி மகள் பத்ரகாளி (வயது 26). இவர் கடந்த 2013- ஆம் ஆண்டு வேறு சமூகத்தை சேர்ந்தவரான அதே ஊரை ஊரைச் சேர்ந்த லாரி டிரைவர் ராமமூர்த்தி (வயது 30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தம்பதிக்கு வெட்டு
சம்பவத்தன்று வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த அய்யனார், பத்ரகாளி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியதில் பத்திரகாளியை அவர் அரிவாளால் வெட்டினாராம். இதை தடுக்க வந்த ராமமூர்த்திக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இருவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யனாரை கைது செய்தனர்.
2 ஆண்டு ஜெயில்
இது தொடர்பான வழக்கு கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண் 2-ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பீட்டர், அய்யனாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.