கட்டி முடிக்கப்பட்ட 2 ஆண்டுகளில் பழுதான நரிக்குறவர் சமூக வீடுகள்
ஆரணி அருகே கட்டி முடிக்கப்பட்டு நரிக்குறவர்கள் சமூகத்தினர் குடியிருக்க வழங்கப்பட்ட வீடுகள் இரண்டே ஆண்டுகளில் பழுதாகி விட்டதாக வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய சென்ற அரசு முதன்மை செயலாளரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.
ஆரணி
ஆரணி அருகே கட்டி முடிக்கப்பட்டு நரிக்குறவர்கள் சமூகத்தினர் குடியிருக்க வழங்கப்பட்ட வீடுகள் இரண்டே ஆண்டுகளில் பழுதாகி விட்டதாக வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய சென்ற அரசு முதன்மை செயலாளரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.
மறுவாழ்வு மையம்
ஆரணியை அடுத்த தச்சூர் கிராமத்தில் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு மையத்தில் 111 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் அதே பகுதியில் இருளர் சமுதாய மக்களுக்காக 110 வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. அதனையொட்டி கட்டிக்கொடுக்கப்பட்ட 27 வீடுகளில் நரிக்குறவர் சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு கூடுதலாக 37 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அரசு முதன்மைச் செயலாளரும், மாவட்ட கண்காணிப்பாளருமான தீரஜ்குமார் இந்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த நரிக்குறவர்கள் நாங்கள் குடிவந்து சுமார் 2 ஆண்டுகள் கூட ஆகவில்லை. இந்த வீடுகள் அனைத்தும் ஒழுகலாகவும் பழுது ஏற்பட்டு இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.
நடவடிக்கை
இது சம்பந்தமாக கலெக்டரிடம் தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் முதன்மை செயலாளர் தீரஜ்குமார் உறுதியளித்தார்.
அவருடன் கூடுதல் கலெக்டர் ஏ.பிரதாப்சிங், (பயிற்சி) உதவி கலெக்டர் ரஷ்மி ராணி, மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமி, தாசில்தார் ஆர்.ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, சவிதா, ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல், ஒன்றிய குழு உறுப்பினர் ஏழுமலை உள்பட அரசு அலுவலர்கள் பலரும் உடன் சென்றிருந்தனர்.