கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது
கல்வராயன்மலையில் கஞ்சா கடத்தி வந்த 2 வாலிபர்கள் கைது
கச்சிராயப்பாளையம்
கல்வராயன் மலையில் இருந்து சேராப்பட்டு-வெள்ளிமலை சாலை வழியாக கஞ்சா கடத்தி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனசரக அலுவலர் சந்தோஷ் தலைமையில் வனத்துறையினர் சேராப்பட்டு-வெள்ளிமலை சாலையில் உள்ள எருக்கம் பட்டு பிரிவு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை வனத்துறையினர் நிறுத்த முயன்றனர். உடனே அந்த மர்மநபர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை வனத்தறையினர் பின்னால் துரத்தி சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கல்வராயன்மலை கூடாரம் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன் மகன் செல்வம்(வயது 22), சுப்ரமணி மகன் பிரகாஷ்(22) என்பதும் கஞ்சாவை கடத்தி கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வரும் வழயில் வனத்துறையினர் மடக்கியதால் அவர்களிடம் பிடிபடாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது அதில் ஒருகிலோ கஞ்சா இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னா் மோட்டார் சைக்கிளுடன் அவர்கள் இருவரையும் பிடித்து கரியாலூா் போலீஸ் நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.