மோட்டார் சைக்கிளில் கஞ்சா பதுக்கிய 2 வாலிபர்கள் கைது
மோட்டார் சைக்கிளில் கஞ்சா பதுக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
முசிறி:
முசிறியில் உள்ள துறையூர் சாலையில் ஐத்தாம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் முசிறி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த பதிவு எண் இல்லாத மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தி, அதை ஓட்டி வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், முசிறி கூடமுறக்கார தெருவை சேர்ந்த முருகனின் மகன் நித்தீசுவரன்(21), கோவை தென்னம்பாளையத்தை சேர்ந்த மோகனின் மகன் பார்த்திபன்(20) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அவர்கள் கையில் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியை காட்டி மிரட்டியதாகவும், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களது மோட்டார் சைக்கிளை போலீசார் சோதனை செய்தபோது, இருக்கையின் அடியில் 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் 2 இருந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்த முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.