அய்யனார் கோவில் உண்டியலை உடைக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது


அய்யனார் கோவில் உண்டியலை உடைக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
x

விக்கிரமங்கலம் அத்தி குளக்கரையில் உள்ள அய்யனார் கோவில் உண்டியலை உடைக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்

அய்யனார் கோவில்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மேற்கு பகுதியில் அத்தி குளக்கரையின் மீது பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோவிலை சுற்றி இரும்பு கம்பிகளைக்கொண்டு அடைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் கோவிலின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் எழுந்தனர். பின்னர் அவர்கள் ஒன்று திரண்டு அய்யனார் கோவிலுக்கு வந்தனர்.

2 பேர் கைது

அப்போது அங்கு இருந்த 2 வாலிபர்கள் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த சிறிய உண்டியலை உடைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை மடக்கி பிடித்து விக்கிரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் விக்கிரமங்கலம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகரை சேர்ந்த சிபிராஜ் (வயது 18), சவுந்தர்ராஜன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் சாமிதுரை வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 3 கிலோ எடையுள்ள வெங்கல மணியும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story