கடம்பூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு 2½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 வாலிபர்கள் கைது
கடம்பூரில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு 2½ டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 2 வாலிபர்கள் கைது
ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார், கடம்பூர் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை தடுத்தி நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மொத்தம் 2 ஆயிரத்து 430 டன் (2½ டன்) ரேஷன் அரிசி இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், பெருந்துறை நல்லகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த உதயகுமார் (வயது 30), பவானிசாகர் பகுதியை சேர்ந்த பிரபு (27) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு மற்றும் உதயகுமாரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2½ டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்த வேன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.