பட்டாசு வெடித்து 2 வாலிபர்கள் உடல் கருகி பலி
பட்டாசு வெடித்து சிதறியதில் 2 வாலிபர்கள் உடல் கருகி பலியாகினர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்தவர் ராசு. இவருடைய மகன் ராஜா (வயது 25). அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் கருப்பையா என்ற சின்னவர் (32). இவர்கள் இருவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மாந்தோப்பில் தார்ப்பாய் மூலம் கொட்டகை அமைத்து திருவிழா மற்றும் வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளுக்காக பட்டாசு தயாரித்து விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். வெடிகளின் மேல் நூலை இறுக்கமாக கட்டிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் தயாரித்த வெடிகள் வெடித்தன. அப்போது ஏற்பட்ட தீப்பொறிகள் பட்டு கொட்டகை தீப்பற்றி எரிய தொடங்கியது.
உடல் கருகி பலி
பின்னர் சில நொடிகளிலேயே அந்த கொட்டகை முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. மேலும் கொட்டகைக்குள் சிக்கிய ராஜா, கருப்பையா ஆகியோர் மீதும் தீப்பற்றியது. இதனால் அவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அப்போது கொட்டகையில் இருந்த அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறின.
இதில் தூக்கிவீசப்பட்ட 2 பேரும் உடல்கருகி பலியாகினர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நத்தம் தாசில்தார் ராமையா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பலியான 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்தில் இறந்த ராஜாவுக்கு சின்னம்மாள் என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அதேபோல் கருப்பையாவுக்கு கலையரசி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.