தேனியில் பெண்ணிடம் வழிப்பறி செய்ய முயன்ற 2 வாலிபர்கள் கைது
தேனியில் பெண்ணிடம் வழிப்பறி செய்ய முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தேனி கே.ஆர்.ஆர். நகர் 13-வது தெருவை சேர்ந்தவர் பால்பாண்டியன். இவருடைய மனைவி விசாலாட்சி (வயது 31). நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அதில் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர், விசாலாட்சியின் கைப்பையை பறித்துக்கொண்டு தப்பிச்செல்ல முயன்றார். உடனே அவர் சத்தம் போட்டார். அப்போது அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற 2 வாலிபர்களையும் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் தேனி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள், பெரியகுளம் பட்டாப்புளி நடுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் செல்லப்பாண்டி (27), குமார் மகன் முத்துக்குமார் (27) என்பது தெரியவந்தது. இதுகுறித்து விசாலாட்சி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாண்டி, முத்துக்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களை தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருடர்களை பிடித்துக் கொடுத்த பொதுமக்களை போலீசார் பாராட்டினர்.