சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் 20 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சர் துரைமுருகன் நடத்தி வைத்தார்
சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் 20 ஜோடிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் 2023-2024-ம் ஆண்டுக்கான மானியக்கோரிக்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்க தாலி உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக கடந்த ஜூலை 7-ந்தேதி சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட 34 ஜோடிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணங்களை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்கள் வழங்கினார்.
அதைத்தொடர்ந்து திருவான்மியூர், மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் 20 ஜோடிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்களை வழங்கினார். மணமக்களுக்கு 4 கிராம் தங்கத்தில் தாலி, கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், கியாஸ் அடுப்பு, மிக்சி, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட 28 வகையான பொருட்கள் வழங்கப்பட்டது.
திருமண விழாவுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணமக்களை வாழ்த்தி, அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
விட்டு கொடுத்து வாழவேண்டும்
ஆட்சிக்கு வந்த 2 ஆண்டு காலத்தில் 1,000 கோவில்களில் கும்பாபிஷேகம் பெருவிழாவை நடத்தியிருப்பது சரித்திரத்தில் இடம்பெற வேண்டிய, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவேண்டிய சாதனையாகும். காரணம் 1,000 கும்பாபிஷேகம் நடத்துவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. நடத்துபவர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் நடத்துபவர்களை ஊக்குவித்து அதனை திறம்பட செய்கின்ற காரியத்தை சேகர்பாபு செய்திருக்கிறார்.
நான் இந்த திருமண விழாவுக்கு வராவிட்டால்கூட சேகர்பாபுவை பார்த்து ஒரு சால்வை போர்த்தி ஆயிரம் பிறை கண்டவனை போல் ஆயிரம் கும்பாபிஷேகம் நடத்திய அவருக்கு வாழ்த்தை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். இந்த நிதியாண்டிற்கு கோவில்கள் சார்பில் நடத்திட அறிவிக்கப்பட்ட 600 திருமணங்களில் 426 திருமணங்கள் இதுவரை நடத்தி வைக்கப்பட்டுள்ளன.
கணவனும், மனைவியும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையோடு வாழ்ந்தால் தான் வாழ்க்கை செம்மையாக அமையும். இன்றைக்கு திருமணம் செய்து கொண்ட மணமக்களும் அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது சாதாரணமானது அல்ல. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிற மனப்பான்மையோடு வாழ வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலயசாமிகள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி, ஜே.எம்.எச். அசன் மவுலானா எம்.எல்.ஏ., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.