20¾ கிலோ கஞ்சா பறிமுதல்
20¾ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ரகசிய தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா உள்பட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டைக்கு விற்பனைக்காக 2 பேர் கஞ்சா கடத்தி வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே சந்தேகப்படும்படி மொபட்டில் 'டிராவல் பேக்'குடன் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் திண்டுக்கல் குல்லனம்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 40), நல்லம்பட்டியை சேர்ந்த மதன்குமார் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த 'டிராவல் பேக்'கை சோதனையிட்டனர். அதில் கஞ்சா பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.
20¾ கிலோ கஞ்சா பறிமுதல்
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். மேலும் பையில் இருந்த கஞ்சாவை எடையிட்டனர். இதில் மொத்தம் 20¾ கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வன், மதன்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.10 லட்சத்து 37 ஆயிரத்து 500 என்று போலீசார் தெரிவித்தனர். கைதான 2 பேரிடம் இருந்து 3 செல்போன்கள், 2 மொபட்டுகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கஞ்சாவை கைப்பற்றியதோடு 2 பேரையும் கைது செய்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.