ஒரு மணி நேரத்தில் ரூ.20 லட்சம் கிடைக்கும் என ஏமாற்ற முயற்சி
ஒரு மணி நேரத்தில் ரூ.20 லட்சம் கிடைக்கும் என ஏமாற்ற முயற்சி
போடிப்பட்டி
செல்போன் கோபுரம் அமைக்க இடம் கொடுத்தால் ஒரு மணி நேரத்தில் வங்கிக் கணக்குக்கு ரூ. 20 லட்சம் முன் பணம் அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்ற முயன்ற கும்பலிடம் சாமர்த்தியமாக பேசி தப்பிய விவசாயியின் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சைபர் குற்றங்கள்
நவீன தகவல் தொழில் நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி முகமோ, முகவரியோ தெரியாத நபர்கள் பலவிதங்களில் ஏமாற்றி வருகிறார்கள். செல்போன் டவர் அமைக்க இடம் கொடுத்தால் பல லட்சங்கள் அட்வான்ஸ், பல ஆயிரங்கள் வாடகை என்று ஆசை காட்டி அரியலூர் மாவட்டத்தில் ரூ.24 லட்சம் ஏமாற்றிய 4 பேர் கும்பல் சமீபத்தில் போலீசாரிடம் சிக்கியுள்ளது.இதுபோல பல ஏமாற்றுக் கும்பல்கள் செயல்படும் நிலையில் ஆசை வலை விரித்த கும்பலிடம் திருப்பூர் விவசாயி சாதுர்யமாகப் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இடம் தேர்வு
அந்த ஆடியோவில் ஒரு பெண் திருப்பூர் விவசாயியிடம் செல்போன் கோபுரம் அமைக்க 1½ சென்ட் இடம் தேவை என்றும் அதற்கு அட்வான்ஸ் தொகையாக ரூ.40 லட்சம் மற்றும் மாத வாடகையாக ரூ.40 ஆயிரம் தருவதாகக் கூறுகிறார்.மேலும் 10 ஆண்டுகள் ஒப்பந்த காலம் என்றும், ஒப்பந்த காலம் முடிந்ததும் ரூ. 20 லட்சம் மட்டும் திருப்பிக் கொடுத்தால் போதும் என்றும் கூறுகிறார்.அத்துடன் தங்கள் இடத்தின் பட்டா, அடையாளச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை அனுப்பி வைத்தால் சேட்டிலைட் மூலம் ஆய்வு செய்து இடம் தேர்வு செய்வதாகவும், இடம் தேர்வானால் மட்டும் ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்களைத் தயார் செய்வதற்காக ஆடிட்டருக்கு ரூ. 3500 செலுத்த வேண்டும் என்றும் கூறுகிறார்.
அனைத்துக்கும் சம்மதித்த விவசாயி பட்டா இல்லாத எதோ ஒரு போலியான ஆவணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனாலும் தங்கள் இடம் செல்போன் கோபுரம் வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.எனவே வங்கிக் கணக்குக்கு ரூ. 3500 அனுப்பி வைத்தால் ஒரு மணி நேரத்தில் ஆவணங்கள் தயாராகி விடும்.வங்கிக் கணக்குக்கு ரூ. 20 லட்சம் அனுப்பி வைக்கப்படும் என்றும் இடத்தைப் பார்க்க வரும்போது மீதமுள்ள ரூ. 20 லட்சம் நேரில் காசோலையாக வழங்குவார்கள் என்றும் அந்த பெண் மீண்டும் கூறுகிறார்.உடனே அந்த விவசாயி நிலப்பட்டா இல்லாமல் எதோ ஒன்றை அனுப்பி வைத்தால் தேர்வு செய்ததாகக் கூறி ஏமாற்றுகிறீர்களே கை காலெல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது உழைத்துப் பிழைக்க வேண்டியது தானே என்று திட்டியதும் பதிலுக்கு திட்டி விட்டு அந்த பெண் தொடர்பைத் துண்டித்து விடுகிறார்.
உழைப்புக்கேற்ற ஊதியம்
வலைத்தளங்களில் வேகமாகப் பரவும் இந்த ஆடியோவைக் கேட்ட பலரும் விவசாயியைப் பாராட்டுகிறார்கள்.
உண்மையிலேயே செல்போன் கோபுரம் அமைக்கும் நிறுவனங்கள் எதுவும் இதுபோல முன் பணம் எதுவும் கேட்பதில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைத்தால் போதும் என்ற மன நிலையில் இருந்தால் யாராலும் ஏமாற்ற முடியாது என்பதற்கு இந்த திருப்பூர் மாவட்ட விவசாயி சிறந்த உதாரணமாகும்.