ரெயில் மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது


ரெயில் மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது
x

ரெயில் மறியலில் ஈடுபட்ட 20 பேர் கைது

தஞ்சாவூர்

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நேற்று 3-வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து தஞ்சை ரெயில் நிலையம் முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கபிலன், மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், சந்திரா உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் ரெயில் நிலையம் முன்பு முள்வேலி தடுப்பு கம்பிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் இளைஞர் காங்கிரசார் ரெயில் நிலையத்தின் பின்பகுதி வழியாக வந்து சென்னையில் இருந்து திருச்சி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சங்கரசூரியமூர்த்தி தலைமையில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சிவா முன்னிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் காங்கிரசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களை கைது செய்து அழைத்து வந்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.


Related Tags :
Next Story