அங்கீகாரம் பெறாத மனைகள் பத்திரப்பதிவு விவகாரத்தில் 20 பேர் பணியிடை நீக்கம்: 123 பேர் மீதும் நடவடிக்கை எடுப்பதில் ஏன் தாமதம்?- பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் அதிரடி உத்தரவு
அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் 123 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என்பது குறித்து பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் 123 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்? என்பது குறித்து பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அங்கீகாரம் பெறாத மனைகள்
தேனி மாவட்டம், வீரபாண்டி அருகே பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், வீரபாண்டி பகுதியில் அரசின் அங்கீகாரம் பெறாத வீட்டடி மனைகளை மோசடியாக விற்பனை செய்து, சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்கின்றனர். இதனால், அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
உள்ளாட்சி பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத நிலம், மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என சட்டம் உள்ளது. இதை பின்பற்றாமல் தேனி சார்பதிவாளர் முறைகேடாக பத்திரப்பதிவு செய்து கொடுக்கிறார். இவரது அலுவலகத்தில் முறைகேடாக பதிவு செய்த பத்திரங்களை ரத்து செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
சார் பதிவாளர் மீது நடவடிக்கை
இந்த வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், 2016-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகள் பதிவானது குறித்து, பத்திரப்பதிவு ஊழியர்கள் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் ஆஜராகி, அங்கீகாரம் பெறாத 31 ஆயிரத்து 625 வீட்டுமனைகள் பதிவு செய்த விவகாரத்தில் 123 பத்திரப்பதிவு ஊழியர்களுக்கு மெமோ அளிக்கப்பட்டு உள்ளது. 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டது.
கூடுதல் ஐ.ஜி. ஆஜராக உத்தரவு
இதையடுத்து நீதிபதிகள், 123 பேருக்கு மெமோ வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் 20 பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மற்றவர்கள் மீதான நடவடிக்கைக்கு தாமதம் ஏன்? என கேள்வி எழுப்பியதுடன், இதுதொடர்பாக பத்திரப்பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி. ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். விசாரணையை 30-ந்தேதி (நாளைக்கு) ஒத்திவைத்தனர்.