ஓய்வு பெற்ற அலுவலர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை


ஓய்வு பெற்ற அலுவலர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளை
x

திருவண்ணாமலை அருகே ஓய்வு பெற்ற அலுவலர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே ஓய்வு பெற்ற அலுவலர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில் தொடர்ந்து நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்களால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

ஓய்வு பெற்ற அலுவலர்

திருவண்ணாமலை தாலுகா கிளிப்பட்டு வள்ளலார் நகரை சேர்ந்வர் முகுந்தன் (வயது 62), ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அலுவலர். நேற்று காலை அவர், தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு கடலூருக்கு சென்றார்.

பின்னர் அன்று இரவு சுமார் 9 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

அவர் பீரோவை பார்த்த போது அதில் இருந்து 20 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவுகளை சேகரித்து கொண்டனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தொடர் திருட்டு சம்பவங்கள்

திருவண்ணாமலை போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அதாவது கடந்த 10 நாட்களுக்கு முன்பு காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள கடைகளில் முகமுடி கொள்ளையன் ஒருவர் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. ஆனால் இதுகுறித்து போலீசார் எந்தவித புகாரும் என்று தெரிவித்து விட்டனர்.

அதேபோல் ஓரிரு தினங்களுக்கு முன்பு பெருமாள் நகர் பகுதியில் வியாபாரி ஒருவரில் வீட்டில் 5 பவுன் நகை திருடப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சமீபத்தில் சாரோன் கரியான் செட்டி தெரு பகுதியில் 2 வீடுகளில் இருந்து 22 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் அச்சம்

இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் திருவண்ணாமலையில் மக்கள் மிகவும் அச்சம் அடைந்து உள்ளனர். கோடை விடுமுறையால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை பூட்டி விட்டு வெளியூர் செல்லும் ஆசையில் உள்ளனர்.

இந்த சமயத்தில் இதுபோன்று தொடர்ந்து நடைபெறும் திருட்டு, கொள்ளை சம்பவத்தினால் மக்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்லவே அச்சம் அடைந்து உள்ளனர்.

எனவே இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுத்து திருவண்ணாமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும் கொள்ளை சம்பவம் நடைபெற்ற சில இடங்களில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லை என்று கூறப்படுகிறது. எனவே குடியிருப்பு பகுதிகளில் மக்களின் நலனை கருத்தில் அனைத்து சாலை பகுதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story