ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2¼ பவுன் நகை அபேஸ்
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2¼ பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்
மூதாட்டி
மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் அமலோற்பவம் (வயது 75). இவர் நேற்று திங்கள்சந்தையில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் மகளிர் மட்டும் அரசு பஸ்சில் ஏறினார்.
அந்த பஸ் மாமூட்டுக்கடை பஸ் நிறுத்தம் வந்து நின்றதும் அமலோற்பவம் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார். அப்போது, தனது கழுத்தில் கிடந்த 2¼ பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
போலீசில் புகார்
பஸ் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து அமலோற்பவம் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சில் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்த நபரை தேடி வருகிறார்கள்.
மகளிர் பஸ்சில் சென்ற மூதாட்டியின் நகை அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.