அரசு பஸ் டிரைவர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள்-ரூ.1½ லட்சம் திருட்டு


அரசு பஸ் டிரைவர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள்-ரூ.1½ லட்சம் திருட்டு
x
திருச்சி

கொள்ளிடம் டோல்கேட், ஆக.6-

திருச்சி அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 20 பவுன் தங்க நகைகள், ரூ.1½ லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஒரே வீட்டில் 3-வது முறையாக நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசு பஸ் டிரைவர்

திருச்சி நம்பர்-1 டோல்கேட் அருகே உள்ள திருவள்ளுவர் அவென்யூ வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் தமிழரசு (வயது 57). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2-ந் தேதி தமிழரசு குடும்பத்துடன் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர், அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

20 பவுன் நகைகள் திருட்டு

இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறைகளில் வைக்கப்பட்டிருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே கீழே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க மோதிரம், வளையல், தங்க சங்கிலி உள்ளிட்ட 20 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவை மர்ம நபர்களால் திருடப்பட்டு இருந்தது.

3-வது சம்பவம்

இது குறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் வீட்டை ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளின் கைரேகைகளை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் திருட்டு சம்பவம் நடந்த வீட்டை மோப்பமிட்டு சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தற்போது கொள்ளை சம்பவம் நடந்துள்ள தமிழரசு வீட்டில் 3 வருடங்களுக்கு முன்பு 6 பவுன் தங்க நகை திருடப்பட்டது. மேலும் தமிழரசு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னைக்கு சென்றபோதும் 11 பவுன் நகை, 1 லட்சம் ரொக்க பணம் திருட்டு போனது. தற்போது, 3-து முறையாக திருட்டு நடைபெற்றுள்ளது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மீட்டுத்தர கோரிக்கை

இச்சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் தமிழரசு கூறும்போது, எனது வீட்டில் ஏற்கனவே 2 முறை திருட்டு நடைபெற்றுள்ளது. திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை இதுவரை பிடிக்கவில்லை. திருட்டு போன நகைகள் மற்றும் பணத்தை மீட்டு தரவில்லை. மீண்டும் 3-வது முறையாக நகை-பணம் திருட்டு போனதால் குடும்பத்தினரிடையே பேரிடியாய் இருக்கிறது. கடந்த 3 வருடங்களில் 37 பவுன் மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை இழந்துள்ளேன். காவல்துறையினர் திருட்டு ஆசாமிகளை பிடித்து நகை-பணத்தை மீட்டுத்தர வேண்டும், என்றார்.


Next Story