20 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர்கள் சேதம்
20 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர்கள் சேதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் ஏக்கரில் சம்பா தாளடி பயிரிடப்பட்டு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் 37 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிறு ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டிருந்தது. கடந்த 4 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் அறுவடை செய்ய வேண்டிய 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ள சம்பா தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்து சேதம் அடைந்துள்ளது. இதில் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிர்கள் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தண்ணீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக நல்லத்துக்குடி, கோடங்குடி, செருதியூர், அகரகீரங்குடி, கடக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் துளிர்விட்டு வளர்ந்து வரும் உளுந்து பயிர்கள் தண்ணீர் வடிய வழியின்றி மூழ்கியுள்ளது. மழைநீர் வயல்களில் தேங்கியுள்ளதால் உளுந்து பயிர்கள் முற்றிலும் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே உடனடியாக சேதம் அடைந்த உளுந்து பயிர்களை உரிய முறையில் கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வயலில் சாய்ந்த பயிர்களை தண்ணீரை வடியவைத்து எந்திரத்தின் மூலம் தரையோடு அறுவடை செய்யும் போது உளுந்து பயிர்கள் துண்டாகி பயனற்று போகும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.