ஏர்ஹாரன் பயன்படுத்திய 20 வாகனங்களுக்கு அபராதம்
ஊட்டியில் ஏர்ஹாரன் பயன்படுத்திய 20 வாகனங்களுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.
ஊட்டி
ஊட்டியில் ஏர்ஹாரன் பயன்படுத்திய 20 வாகனங்களுக்கு அபராதம் விதித்து வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுத்தார்.
கலெக்டருக்கு புகார்
தமிழகத்தில் பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்வதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராத தொகையை அதிகரித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் பொதுமக்களிடையே சாலை போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜனவரி முதல் வாரம் சாலை போக்குவரத்து வாரம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனாலும் சில இடங்களில் விதிமுறைகள் மீறப்படுகின்றன.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும், பள்ளி-கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏர்ஹாரன்களை ஒலிக்க செய்வதால் பாதிப்பு ஏற்படுவதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் வந்தது.
எச்சரிக்கை
இதையடுத்து கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் நேற்று ஊட்டி லவ்டேல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
இந்த சோதனையில் வேன், பஸ் உள்பட 20 வாகனங்களில் இருந்து ஏர்ஹாரன்கள் அகற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக டிரைவர், கண்டக்டர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
பறிமுதல்
இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் கூறியதாவது:- மத்திய மோட்டார் வாகன விதி 119-ன் படி 89 டெசிபல் அளவுக்கு மேல் உள்ள ஹாரன்கள் பயன்படுத்தக் கூடாது. அதேபோல் தேவையில்லாத இடங்களில் ஹாரன்கள் அடிக்க கூடாது. இந்த விதிகளை மீறிய 20 வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பஸ்களில் முதலுதவி பெட்டி இருக்கிறதா?, வழித்தட வரைபடம், வந்து செல்லும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளதா?, டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு உரிய ஆவணங்கள் உள்ளதா?, டிரைவருக்கு பெரிய வாகனங்களை இயக்க பேட்ஜ் வழங்கப்பட்டு உள்ளதா? போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.