சிறுமியை பாலியல் வன்முறை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
திருப்பூர்
வெள்ளகோவிலில் சிறுமியை பாலியல் வன்முறை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
20 ஆண்டு சிறை
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பீகாரை சேர்ந்த சஞ்சிப் நாயக் என்கிற பாபு (வயது 22) என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு அவர், 15 வயது சிறுமியை காதலித்து பின்னர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தனி அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சிப் நாயக்கை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சஞ்சிப் நாயக்குக்கு 3 பிரிவில் 20 ஆண்டு, 10 ஆண்டு, 20 ஆண்டு சிறை தண்டனையும் இதை ஏககாலத்தில் அனுபவிக்கவும், ரூ.1,500 அபராதம் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.
பாராட்டு
சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் ஏட்டு ரவி ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டினார்.