சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கரும்பு வெட்டும் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில்    கரும்பு வெட்டும் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை    கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 29 Nov 2022 12:15 AM IST (Updated: 29 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கரும்பு வெட்டும் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடலூர்


கரும்பு வெட்டும் தொழிலாளி

பண்ருட்டி அருகே குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பாலு (வயது 25). கரும்பு வெட்டும் தொழிலாளி. திருமணமானவர். இவருடன் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, அவரது தாய், தந்தையுடன் கடலூர் முதுநகர் அருகே கண்ணாரப்பேட்டை பகுதியில் தங்கி கரும்பு வெட்டும் வேலை செய்து வந்தனர்.

கடந்த 15.2.2021 அன்று இரவு சிறுமியின் தந்தை ரூ.4 ஆயிரம் பணத்தை கையில் வைத்துக்கொண்டு கடைக்கு சென்றார். அவருடன் சிறிது தூரம் சென்ற பாலு, திரும்பி வந்து, அங்கிருந்த சிறுமியிடம் உனது தந்தை மது குடிப்ப தற்காக பணத்துடன் செல்கிறார். அவரை அழைத்து வா? என்று கூறியுள்ளார்.

பாலியல் பலாத்காரம்

இதை நம்பிய அந்த சிறுமி தனது தந்தையை தேடி இருட்டான பகுதிக்கு சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற பாலு, சிறுமி வாயை பொத்தி அங்குள்ள மரத்தடிக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை தஞ்சாவூருக்கு கடத்திச்சென்று விட்டார்.

இது பற்றி சிறுமியின் தாய் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலுவை கைது செய்து, அந்த சிறுமியை மீட்டனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

20 ஆண்டு சிறை தண்டனை

இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் பாலு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட சமூக பாதுகாப்பு துறை மூலம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், அரசின் ஏதாவது ஒரு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். ஏற்கனவே ரூ.50 ஆயிரம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்பட்டதால், மீதி ரூ.4½ லட்சம் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.


Next Story