தமிழ்நாட்டில் 200-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..!!
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 242 பேர் கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர். இதில், 119 ஆண்கள் மற்றும் 123 பெண்கள் அடங்குவார்கள்.
அதிகபட்சமாக சென்னையில் 82 பேருக்கும், செங்கல்பட்டில் 26 பேருக்கும், கன்னியாகுமரி 26 பேருக்கும், திருவள்ளூரில் 13 பேருக்கும், கோவையில் 12 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணிகளில் இங்கிலாந்து, இலங்கை, சிங்கப்பூர், ஓமன் நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 34 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,216 ஆக உள்ளது.
அதே சமயத்தில் மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உயிரிழப்பும் ஏதுமில்லை. இன்று மட்டும் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு 112 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.