காளை விடும் விழாவில் 200 மாடுகள் பங்கேற்பு


காளை விடும் விழாவில் 200 மாடுகள் பங்கேற்பு
x

நாகநதி கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் 200 மாடுகள் பங்கேற்றன.

வேலூர்

அடுக்கம்பாறை

நாகநதி கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் 200 மாடுகள் பங்கேற்றன.

காளை விடும் விழா

வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த நாகநதி கிராமத்தில் மாசி மக உத்திர உற்சவத்தையொட்டி காளை விடும் விழா இன்று நடந்தது. விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது.

சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் முகாமிட்டிருந்தனர்.

வண்ண வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வரப்பட்ட காளைகளுக்கு காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேலூர் சப்-கலெக்டர் கவிதா தலைமை தாங்கினார்.

கணியம்பாடி ஒன்றியக்குழு துணை தலைவர் கஜேந்திரன், வேலூர் தாசில்தார் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர் பாபு, துணை தலைவர் ஷீலாஜெயசீலன், ஊர் பெரியதனம் ஜெயசீலன், ஜோதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் வரவேற்றார்.

200 காளைகள்

காலை 10 மணி அளவில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து காளை விடும் விழா தொடங்கியது. விழாவில் வேலூர், அணைக்கட்டு, ஊசூர், பென்னாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன. கால்நடை மருத்துவ குழுவினரின் பரிசோதனைக்கு பின்னர் மாடுகள் ஒவ்வொன்றாக வீதியில் அவிழ்த்து விடப்பட்டது.

தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளைகளை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர். விழாவை காண உள்ளூர் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். ஒவ்வொரு மாடுகளும் ஒரு சுற்றுகள் மட்டுமே ஓட விட அனுமதிக்கபட்டது.

பரிசுகள்

விழாவில் இலக்கை நோக்கி அதிவேகமாக சீறிபாய்ந்து ஓடி முதலிடம் பிடித்த காளை உள்பட மொத்தம் 50 பரிசுகள் வழங்கபட்டது. விழாவில் மாடுகள் முட்டியதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் துணை தாசில்தார் உதயகுமார், வருவாய் ஆய்வாளர் சந்தியா, வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story