காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்


காசிக்கு 200 பேர் ஆன்மிக பயணம்
x

காசிக்கு 200 பேரை ஆன்மிக பயணமாக அழைத்து செல்ல தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது குறித்து திண்டுக்கல்லை சேர்ந்த பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

ஒவ்வொரு மதத்தினருக்கும் ஒவ்வொரு புனித தலம் இருக்கிறது. வாழ்க்கையில் ஒருமுறையாவது அங்கு சென்றுவர வேண்டும் என்பது அவரவர் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

இந்துக்கள் காசி செல்வதை புண்ணியமாக கருதுகிறார்கள். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதை பெருமையாக சொல்கிறார்கள். இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணத்தை கடமையாக கொள்கிறார்கள்.

வசதிபடைத்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் மேற்சொன்ன புனித தலங்களுக்கு சென்று வந்துவிடுகிறார்கள்.

வசதி குறைந்தவர்களால் அவ்வாறு செல்லமுடிவது இல்லை.

அரசு ஏற்பாடு

அவ்வாறு வசதி இல்லாதவர்கள் புனித தலங்களுக்கு சென்றுவர அரசாங்கம் உதவி வருகிறது.

ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் 550 பேர் அரசு நிதி உதவியுடன் ஜெருசலேம் சென்று வருகிறார்கள். தமிழக அரசின் மானிய உதவியுடன் இஸ்லாமியர்கள் 'ஹஜ்' பயணம் சொல்கிறார்கள்.

அதுபோல் இந்துக்கள் 500 பேர் ஆண்டுதோறும் மானசரோவர், முக்திநாத் ஆகிய தலங்களுக்கு சென்றுவர உதவித்தொகை வழங்கப்படுகிறது. 2012-ம் ஆண்டு அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, அதற்கான திட்டத்தை தொடங்கிவைத்தார்.

காசி ஆன்மிக பயணம்

இந்தநிலையில் கடந்த மே மாதம் சட்டசபையில் நடந்த இந்துசமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை அறிவிப்பில், "காசிக்கு ஆன்மிக பயணமாக 200 பேர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதற்கான செலவு ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதை நடைமுறைப்படுத்தும் விதமாக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், 'ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு, தமிழ்நாட்டில் உள்ள 20 மண்டலங்களில் 200 பேர் ஆன்மிக பயணத்துக்கு ராமேசுவரம் கோவில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். தகுதிவாய்ந்தவர்கள் டிசம்பர் 15-ந் தேதிக்குள் அந்தந்த மண்டல இணை கமிஷனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உள்ளவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இந்த ஆண்டு காசி புனித பயணத்துக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு 200 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்பட இருக் கிறது' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசின் இந்த ஆன்மிக பயண திட்டத்தை திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

வயது வரம்பில் தளர்வு

திண்டுக்கல்லை சேர்ந்த செந்தில்குமார்:- கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை போல் இந்துக்களுக்கான ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அரசு முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. வயதான காலத்தில் காசி பயணம் மேற்கொள்ள விரும்பும் ஏழை மக்களுக்கு இந்த திட்டம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும். அவர்கள் மனநிறைவுடன் அரசுக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் காசி பயணம் மேற்கொள்வதற்கான வயது வரம்பில் மட்டும் சற்று தளர்வு கொடுக்கலாம். குறைந்தபட்சம் 50 வயதுக்கு மேற்பட்டவர்களையும் இந்த திட்டத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.

தமிழக புனித தலங்கள்

பழனியை சேர்ந்த சாலையோர வியாபாரி சண்முகாநந்தன்:- நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எட்டா கனியாக இருந்த காசி யாத்திரையை அரசு தற்போது அவர்களின் கைகளிலேயே கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். வடநாட்டில் உள்ள புனித தலங்களுக்கு செல்வதற்கு அரசு மானியம் வழங்குவது போல் தமிழகத்தில் உள்ள புனித தலங்களுக்கும் செல்ல மானியம் வழங்கினால் வயதானவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் காசி யாத்திரை செல்வதற்கு வருமான சான்று, வயது சான்று உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறைகள் உள்ளன. இவற்றை தளர்த்த வேண்டும்.

எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

பழனியை சேர்ந்த சுப்புராஜ்:- வயதானவர்கள் தங்களின் கடமைகளை முடித்துவிட்டு காசிக்கு புனித பயணம் மேற்கொள்வதில் பொருளாதார பிரச்சினை, மொழி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இதனால் அவர்கள் தனியாக செல்ல அச்சப்பட்டனர்.

தற்போது அரசு 200 பேரை ஒருங்கிணைத்து காசி யாத்திரைக்கு அழைத்துச்செல்வது வயதானவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஆனால் தமிழகத்தில் மொத்தம் 200 பேர் தான் அழைத்துச்செல்லப்படுகின்றனர். இது காசியாத்திரை கனவில் இருக்கும் பலருக்கு ஏமாற்றத்தை அளிக்கும். எனவே எண்ணிக்கையை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமர்நாத் பனிலிங்க யாத்திரை

சாணார்பட்டி அருகே மேட்டுக்கடையை சேர்ந்த பட்டாச்சாரியார் திருவேங்கட ஜோதி:- தமிழக அரசின் காசியாத்திரை திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். காசி மட்டுமல்லாது அமர்நாத் பனி லிங்க யாத்திரை. நேபாள நாட்டில் உள்ள புனித தலங்கள் அனைத்திற்கும் வயதானவர்கள் சென்று வழிபாடு நடத்திவர அரசு உதவி செய்ய வேண்டும். மேலும் இந்தியாவில் உள்ள புனித தலங்கள் அனைத்தையும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பார்வையிட்டு வழிபாடு நடத்தும் வகையில் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.

முக்கிய வழிபாட்டு தலங்கள்

வி.மேட்டுப்பட்டியை சேர்ந்த கண்ணன்:- தமிழக அரசின் இந்த திட்டம் வரவேற்புக்கு உரியது. ஆனால் காசி யாத்திரைக்கு அழைத்துச்செல்லப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. இதனை அதிகப்படுத்த வேண்டும். மேலும் மாதா வைஷ்ணவி தேவி கோவில், மதுரா கிருஷ்ண ஜென்மபூமி, அயோத்தி, பூரிஜெகன்நாதர், ஷீரடி உள்ளிட்ட முக்கிய தலங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபடும் வகையில் இந்த திட்டத்தை விரிவு படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மொத்தத்தில் இந்த திட்டம் இந்து சமூக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story