4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்


4 ஆண்டுகளில் 2,000 பேர் பலி: சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் - மநீம வலியுறுத்தல்
x

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உயிர்ப் பலிகளைத் தடுக்க பயன்பாட்டுச் சாலைகள், சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொறியாளர் அணி மாநில செயலாளர் வைத்தீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை-திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஜனவரி முதல் கடந்த ஜூன் மாதம் வரையிலான 4 ஆண்டுகளில் நேரிட்ட விபத்துகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளியான தகவல் பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது.

சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, போதுமான அளவுக்கு பயன்பாட்டுச் சாலைகள் இல்லாததும், சாலை வடிவமைப்பில் உள்ள குளறுபடிகளும்தான் காரணம். தினமும் 1.40 லட்சம் பயணிகள் வாகனம் செல்லும் இந்த சாலையில், தேவையான இடங்களில் அணுகு சாலைகளோ, இலகுரக வாகனங்கள் செல்ல தனி வழியோ இல்லை.

குறிப்பாக, தாம்பரம்-உளுந்தூர்பேட்டை சாலை கொலைக்களமாகவே மாறியுள்ளது. சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், சரிவர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில்லை. உயிர்ப் பலிகளைத் தடுக்க, உடனடியாக சாலையைச் சீரமைப்பதுடன், பயன்பாட்டுச் சாலைகள், சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு கூறியுள்ளார்.


Next Story