ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி? பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பு வீண் - அண்ணாமலை குற்றச்சாட்டு


ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி?  பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பு வீண் - அண்ணாமலை குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 27 March 2023 3:35 PM IST (Updated: 27 March 2023 4:09 PM IST)
t-max-icont-min-icon

ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

தென்காசியைச் சேர்ந்த அந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் 40-க்கும் அதிகமான கிளைகளை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் பயின்ற மாணவர்கள் 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திலிருந்து, அதிக அளவில் தேர்வர்கள் எவ்வாறு தேர்ச்சி அடைந்தார்கள் என்கிற சந்தேகம், தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தங்கள் மையத்திலிருந்து 2000 பேர் தேர்வானது உண்மைதான் என்றும், தேர்வானவர்களின் பட்டியலை அளிக்க தயாராக உள்ளதாகவும், அந்த பயிற்சி மையத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது.

அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும். உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.


Next Story