2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆர்வம் காட்டாத மக்கள்


2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆர்வம் காட்டாத மக்கள்
x
தினத்தந்தி 24 May 2023 12:30 AM IST (Updated: 24 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

திண்டுக்கல்

2,000 ரூபாய் நோட்டுகள்

2,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19-ந்தேதி அறிவிப்பு வெளியிட்டது. அந்த நோட்டுகள், செப்டம்பர் 30-ந் தேதி வரை செல்லும் என்றும், அதற்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும் வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற சிறப்பு ஏற்பாடு செய்யவும் பாரத ஸ்டேட் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நேற்று முதல் 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக்கொடுக்கப்பட்டன. அதன்படி திண்டுக்கல்லில் உள்ள வங்கிகளில் நேற்று 2,000 ரூபாய் நோட்டுகள் மாற்றிக்கொடுக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக தனி கவுண்ட்டர் வசதியும் செய்யப்பட்டிருந்தது. மேலும் அரசு, தனியார் வங்கிகளில் ரூ.500, ரூ.100, ரூ.200 நோட்டுகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டது. நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு, தனியார் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் வங்கிகளுக்கு வந்தனர்.

ஆர்வம் காட்டவில்லை

நேற்று முதல் நாள் என்பதால் வங்கிகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. குறைந்த எண்ணிக்கையில் தான் வாடிக்கையாளர்கள் வந்து 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிச்சென்றனர். சிலர் தங்கள் சேமிப்பு கணக்கில் அந்த தொகையை வரவு வைத்தனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிக அளவில் வரும் என எதிர்பார்த்தோம்.

அதற்கேற்ப முன்னேற்பாடுகளையும் முறையாக செய்திருந்தோம். மேலும் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆனால் நேற்று வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைவாக தான் இருந்தது. முதல் நாள் என்பதால் மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற ஆர்வம் காட்டவில்லை. இன்னும் சில நாட்களில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.


Next Story