2015-ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை: லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்ட வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அபராதம்


2015-ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றவில்லை: லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்ட வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அபராதம்
x

லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்டது தொடர்பான வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது..

மதுரை


லாரியை விடுவிக்க லஞ்சம் கேட்டது தொடர்பான வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது..

இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச புகார்

நெல்லை மாவட்டம் திருமலைக்கொழுந்துபுரத்தை சேர்ந்த அடைக்கலம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2014-ம் ஆண்டில் மணல் கடத்தியதாக போலீசார் வழக்குபதிவு செய்து, எனது லாரியை பறிமுதல் செய்தனர். லாரியை விடுவிக்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். ரூ.10 ஆயிரத்தை அபராதமாக மனுதாரரிடம் இருந்து பெற்றுக்கொண்டு லாரியை விடுவிக்க ஐகோர்ட்டு 2015-ம் ஆண்டில் உத்தரவிட்டது. அதன்படி அந்த தொகையை செலுத்திவிட்டேன். ஆனால் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் லாரியை விடுவிப்போம் என பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் இருந்த அப்போதைய இன்ஸ்பெக்டர் சபாபதி, ஏட்டு ஒருவர் மூலமாக தெரிவித்தார். என்னால் கொடுக்க முடியாததால், லாரியை விடுவிக்க மறுத்துவிட்டனர். எனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றாத போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி முரளிசங்கர் விசாரித்தார். அப்போது மனுதாரரின் குற்றச்சாட்டுக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் வக்கீல் ஜே.சி.ரத்னவேல்பாண்டியன் ஆஜராகி, கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த தவறிய போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாதாடினார்.

அபராதம்

முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

மனுதாரர் அபராத தொகையை செலுத்திய பின்பும், அவரது வாகனத்தை திருப்பி தராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் நிலைய அதிகாரியாக இருப்பவர், கோர்ட்டு உத்தரவை பின்பற்றுவது கடமை. ஆனால் இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர், கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் வேண்டுமென்றே மறுத்துள்ளார். அவர் தண்டிக்கப்படாவிட்டால், கோர்ட்டின் மகத்துவம் பாதிக்கப்படும்.

எனவே இன்ஸ்பெக்டர் சபாபதி, ரூ.2 ஆயிரத்தை அபராதமாக தலைமை நீதிபதி நிவாரண நிதியில் செலுத்த வேண்டும். தவறினால் ஒரு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும், மனுதாரருக்கு ரூ.25 ஆயிரத்தை இழப்பீடாக வருகிற 24-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். மனுதாரரின் வாகனத்தை ஒப்படைக்க நெல்லை மாவட்ட 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story